பூட்டிய கடையில் 8 மனித காதுகள், மூளை, மற்றும் கண்கள் கண்டெடுக்கப்பட்டன
மராட்டியத்தில் 15 ஆண்டுகளாக பூட்டிய கடையில் 8 மனித காதுகள், மூளை மற்றும் கண்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் நகரில் மும்பை நாகா என்ற பகுதியில் 15 ஆண்டுகளாக கடை ஒன்று பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அந்த கடை அமைந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுபற்றி அந்த பகுதியில் குடியிருப்போர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை தொடர்ந்து மும்பை நாகா காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். கட்டிடம் ஒன்றின் கீழ்தளத்தில் இருந்த அந்த கடையில் பழைய பொருட்கள் நிறைந்திருந்தன.
அவற்றுடன் 2 பிளாஸ்டிக் டப்பாவும் கிடைத்துள்ளன. அவற்றை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 8 காதுகள், மூளை, கண்கள் மற்றும் முகத்தின் சில பகுதிகளும் இருந்துள்ளன. இதுபற்றி விசாரணை மேற்கொள்வதற்காக தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர்.
எனினும், இது கொலையாக இருக்காது என போலீசார் கூறுகின்றனர். ஏனெனில், மனித உறுப்புகள் ரசாயனத்தில் மூழ்க வைக்கப்பட்டு உள்ளன. மருத்துவ நோக்கங்களுக்கான அவை வைக்கப்பட்டு இருக்க கூடிய சாத்தியங்கள் உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
காவல் ஆணையாளர் பூர்ணிமா சவுகுலே கூறும்போது, இறந்த மனித உடல் எங்களுக்கு கிடைத்து இருந்தால், அது கொலையாக இருக்க கூடும் என எங்களுக்கு சந்தேகம் வரும்.
ஆனால், முறையாக வெட்டப்பட்ட 8 காதுகள் உள்ளன. இது சார்ந்த துறையில் இருக்கும் ஒரு நபரால் அல்லது நிபுணரால் செய்யப்பட்டு இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார். அந்த கடையின் உரிமையாளர் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், கடை உரிமையாளரின் 2 மகன்கள் மருத்துவர்களாக உள்ளனர். அதனால், இந்த உறுப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கலாம். எனினும், அனைத்து கோணங்களிலும் நாங்கள் அலசி ஆராய்ந்து வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story