காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற 42 வயது நபர் தீயில் கருகி பலி


காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற 42 வயது நபர் தீயில் கருகி பலி
x
தினத்தந்தி 29 March 2022 3:39 PM IST (Updated: 29 March 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயமானதால் அவரை கொலை செய்ய முயற்சித்த 42 வயது நபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நந்தபுரம் வலையம் பகுதியை சேர்ந்தவர் ரத்னேஷ். 42 வயதான இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்துவருகிறார்.

இதற்கிடையில், ரத்னேஷ் அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு அந்த பெண்ணின் பெற்றோரிடம் ரத்னேஷ் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமண நிச்சயம் செய்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த ரத்னேஷ் இன்று அதிகாலை 1 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். ஏணியை வைத்து வீட்டின் 1-வது மாடிக்கு ஏறிய ரத்னேஷ் அந்த பெண் மற்றும் அவரது தாய், சகோதரன் உறக்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். 

பின்னர் அந்த அறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த செயலின் போது ரத்னேஷ் மீதும் தீப்பற்றியுள்ளது. அறையில் தீப்பற்றியதை உணர்ந்த அந்த பெண், அவரது தாய், சகோதரன் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். மேலும், அக்கம்பக்கத்தினரும் வீட்டிற்குள் வந்து அங்கிருந்தவர்களை மீட்டனர். அந்த பெண்ணும், அவரின் குடும்பத்தினரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், அந்த பெண்ணை தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சித்த ரத்னேஷ் தீயில் கருகி உயிரிழந்தார். அந்த பெண்ணை தீ வைத்து எரிக்க முயற்சித்த ரத்னேஷ் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story