மரம் என்ற வார்த்தையின் எதிர்ச்சொல் என்ன..? இப்படியுமா கேட்பாங்க கேள்வி!


மரம் என்ற வார்த்தையின் எதிர்ச்சொல் என்ன..? இப்படியுமா கேட்பாங்க கேள்வி!
x
தினத்தந்தி 30 March 2022 3:35 PM IST (Updated: 30 March 2022 3:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் ஆண்டுத் தேர்வுகளில் வித்தியாசமான கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களின் ஆண்டுத் தேர்வுகளில் வித்தியாசமான கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர்.

பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்,  5 ஆம் வகுப்பு மாணவர்களின் இந்தி வினாத்தாளில், 'பெட்' (மரம்) என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல் என்ன..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பதோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், 7 ஆம் வகுப்பு மாணவர்களிடம், ஆங்கில வினாத்தாளில்  ‘60’க்கு எதிர்ச்சொல் என்ன..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பிரயாக்ராஜில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வினாத்தாளில்  ‘செவ்வகத்தை’ அடையாளம் காணும்படி கேள்வி கேட்கப்பட்டது. இப்படி ஆங்கிலத் தாளில் கணிதம் சம்பந்தப்பட்ட  கேள்வி இருப்பது சற்று வினோதமாக இருந்தது.

இப்படி பதில் அளிக்க முடியாத வகையில் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளால், இந்த விஷயம் விவகாரமாக மாறியுள்ளது.

தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி பொது இயக்குநர், அனாமிகா சிங் கூறுகையில், “கொரோனா மற்றும் தேர்தல் இருந்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுத் தேர்வுகளை நடத்த முடிந்தது. கேள்விகள் தொடர்பான சிக்கல்களை ஆராய பள்ளிக்கல்வி செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

தேர்வுகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் பொறுப்பு, அடிப்படை சிக்ஷா அதிகாரிக்கு(பிஎஸ்ஏ) வழங்கப்பட்டுள்ளது.அதில் மாவட்ட கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்(டையட்) உள்ள ஆசிரியர்கள் சேர்ந்து வினாத்தாள்களைத் தயாரிக்கின்றனர். 

மேலும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(எஸ் சி இ ஆர் டி) தயாரித்த மாதிரி வினாத்தாள்கள் போல் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே விதிமுறையாக உள்ளது.இதில் எங்கு தவறு நடந்தது என்பது தெரியவில்லை. 

1.3 லட்சம் பள்ளிகளில் சேர்ந்துள்ள 1.6 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், இந்த தேர்வை எதிர்கொண்டனர். இத்தகைய குழப்பங்களால் மாநிலத்தின் அரசுப்பள்ளிகளில்,  கல்வித்தரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. 
இப்போது இந்த தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் தெளிவாக கூறப்படவில்லை.

இதற்கிடையே, பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அச்சுப்பிழைகள் மட்டுமின்றி வினாத்தாள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

“எங்கள் பள்ளியில் 50 மாணவர்களுக்கு மொத்தம் மூன்று வினாத்தாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.எனவே, அனைத்து கேள்விகளையும் கரும்பலகையில் எழுத வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. 

இங்கு அச்சுப் பிழைகள் ஏற்படுவது சாதாரண விஷயம்” என்று கோரக்பூரில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் தெரிவித்து அதிர்ச்சியை அதிகரித்தார்.

 “அனைத்து மாணவர்களையும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பண்ணி விடுவதற்கான உத்தரவு இருப்பதால், அரசுப் பள்ளிகளில் தேர்வுகள் என்பது வெறும் சம்பிரதாயமாகவே உள்ளது” என்று ஒரு ஆசிரியர் வருத்தத்துடன் கூறினார்.

Next Story