சமாஜ்வாடி கூட்டணியில் சலசலப்பு - அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ் மீண்டும் பிரிய வாய்ப்பு


கோப்புப் படம்: Akhilesh Yadav twitter
x
கோப்புப் படம்: Akhilesh Yadav twitter
தினத்தந்தி 31 March 2022 8:37 PM IST (Updated: 31 March 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை சிவ்பால் யாதவ் முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவபால்சிங் யாதவுக்கும் இடையே கடந்த காலங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சிவ்பால் யாதவ் கடந்த 2018-ம் ஆண்டு தனிக்கட்சி (பிஎஸ்பி) தொடங்கினார். 

இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்லை முன்னிட்டு சிவ்பால் யாதவ் அகிலேஷ் யாதவுடன் இணைந்தார். சமாஜ்வாடி-பிஎஸ்பி கூட்டணி அமைந்தது. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி தோல்வியைத் தழுவியது. 

இதனால் அகிலேஷ் யாதவ் மீது அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் கடும் அதிருப்தியில் உள்ளார். சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை சிவ்பால் யாதவ் முறித்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிவ்பால் யாதவ் சந்தித்தார். எனவே, அவர் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

மேலும் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 24 அன்று அகிலேஷ் யாதவை சந்தித்த சிவ்பால் யாதவ்,  சமாஜ்வாடி கட்சியில் முக்கிய பதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவி கேட்பதற்கு நீங்கள் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் அல்ல, கூட்டணி தலைவர், என்று சிவ்பால் யாதவுக்கு அகிலேஷ் நினைவூட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஒருமுறை அகிலேஷ் யாதவ் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தபோது, சிவ்பால் யாதவை அழைக்கவில்லை. இதுபற்றி அகிலேஷ் யாதவிடம் சிவ்பால் யாதவ் கேட்டதற்கு, சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் தனிக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார். 

இதுபோன்ற காரணங்களால் அகிலேஷ் யாதவ், சிவ்பால் யாதவ் இடையே உள்ள விரிசல் அதிகமாகி உள்ளது. இது சமாஜ்வாடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story