ஆந்திராவில் நாளை முதல் 13 புதிய மாவட்டங்கள்; "முக்கியமான நாள்" என ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!


ஆந்திராவில் நாளை முதல் 13 புதிய மாவட்டங்கள்; முக்கியமான நாள் என ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!
x
தினத்தந்தி 3 April 2022 5:36 PM IST (Updated: 3 April 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளை முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

ஆந்திர முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். இதையடுத்து ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தெலுங்கு வருட பிறப்பு நாளில் மாவட்டங்கள் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளை முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது. புதியதாக உதயமாக உள்ள மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

“இந்த தினம் ஒரு முக்கியமான நாள்" என முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

மாவட்ட இணையதளங்கள் மற்றும் கையேடுகளை முதல் மந்திரி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த முக்கியமான நாளில் மக்கள் ஈடுபடுவதை சாத்தியமாக்கும் வகையில், மாவட்ட இணையதளங்களை முதல் மந்திரி தொடங்க உள்ளார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி, அனைத்து கிராமங்களிலும் அயராது உழைத்த தன்னார்வலர்களை முதல் மந்திரி பாராட்ட உள்ளார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு  ஏப்ரல் 8 ஆம் தேதி "வசதி தீவனம்" வழங்குகிறார்.

சீரான மாவட்ட  மறுசீரமைப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, முதல் மந்திரியின் வழிகாட்டுதலின் கீழ் நான்கு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக மாற்றுவது தொடர்பான இறுதி அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாகும்.

இவ்வாறு முதல் மந்திரி அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாவட்ட மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை முதல் மந்திரி நடத்தினார். பணியாளர்கள் மற்றும் அதிகாரி இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணைக் குழுக்களின் தலைவர்களால் அவருக்கு விளக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்தின் கட்டமைப்பு, இந்த மாவட்டங்களில் சேர்க்கப்படும் பணியாளர்கள் மற்றும் துறைகளின் எண்ணிக்கை குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது. துறைகளுக்கு அலுவலகங்கள் அமைக்க ஒவ்வொரு குழுவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது அவர் அலுவலக ஒதுக்கீடு நடைமுறைகளை சீர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல் மந்திரி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி அந்தந்த மாவட்ட அலுவலகத்தில்  பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

புதிய நடவடிக்கையின் படி, தற்போதுள்ள சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டம் நாளை முதல் செயல்பட உள்ளது.  

பாலாஜி மாவட்ட கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டியும், போலீஸ் சூப்பிரண்டாக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story