காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம், ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம், ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, டெல்லி நகராட்சி கார்ப்பரேஷன் (திருத்தம்) மசோதா உள்பட ஏழு முக்கிய மசோதாக்கள் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரத்திற்கான மாநிலங்களவை நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஏழு மசோதாக்களில் 6 மசோதாக்கள் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 'குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022', குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் மற்றும் குற்றவியல் சார்ந்த பதிவுகளைப் பாதுகாக்கும் நோக்கங்களுக்காக அவர்களின் அளவீடுகளை எடுக்க காவல்துறைக்கு அங்கீகாரம் அளிக்க முன்மொழிகிறது.
முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடைந்தது. 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. வருகிற 8-ம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் அக்கட்சியின் தற்போதைய தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 5) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை கண்டது. காங்கிரசிடமிருந்த ஆட்சியை புதிதாக நுழைந்த ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரசால் முத்திரை பதிக்க முடியவில்லை.
மேலும் அடுத்ததாக பாஜக ஆட்சியில் உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story