எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு


எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 4 April 2022 7:16 AM GMT (Updated: 4 April 2022 7:16 AM GMT)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உத்தரவிட்டது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைத்தது.

இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து லஞ்ச ஒழிப்புத்துறை 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு, அறப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில், டெண்டர் முறைகேடு வழக்கும், முதற்கட்ட விசாரணை அறிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய தமிழ்நாடு அரசு, விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்திலும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும்  எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக அந்த மனுவில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், மேல்முறையீட்டு மனுவில் எவ்வித முகாந்திரமும் என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story