பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 5 April 2022 3:56 AM IST (Updated: 5 April 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 12-வது தடவையாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

மக்களவையில் நேரமில்லா நேரம் தொடங்கியவுடன் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியபடியே சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்களை தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, சபாநாயகர் இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். அவர் சபை அலுவல்களை தொடர்ந்து நடத்தினார்.

அதையடுத்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையிலும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக அமளி நடந்தது. விலை உயர்வு குறித்து விவாதிக்கக்கோரி கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை சபை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். அமளி காரணமாக, காலையில் 2 தடவை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன.

அப்போது, சபை தலைவர் இருக்கையில் இருந்த சஸ்மித் பத்ரா, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதத்துக்கு பதில் அளிக்குமாறு மத்திய தொழிலாளர் நல மந்திரி பூபேந்திர யாதவை அழைத்தார்.

ஆனால் அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். இதையடுத்து, சபையை நாள் முழுவதும் சஸ்மித் பத்ரா ஒத்திவைத்தார்.

Next Story