தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை பதில் மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 4:33 AM IST (Updated: 5 April 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை முருகானந்தம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு செய்துள்ளார்.

புதுடெல்லி, 

தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து லாவண்யா மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கோரி அவரது தந்தை முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், லாவண்யா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ள அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக்கோரியும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது பதில் மனு தாக்கல் செய்ய மாணவியின் தந்தை முருகானந்தம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் வக்கீல் ஏ.லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தற்கொலை விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில், அரசுக்கு எதிரான கருத்துக்களை நீக்கக்கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

எனது மகளின் மரண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட பின்னரும், அவருக்கு நேரிட்ட துன்புறுத்தல், மதம் மாற மறுத்தது ஆகியவற்றை காவல்துறையினர் நிராகரித்தது காரணமாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அதன் தீர்ப்பில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளது.

கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறையினர் தயக்கம் காட்டினர். எனது மகளின் மரண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து பள்ளி நிர்வாகத்தை அவசரஅவசரமாக விடுவிக்க காவல்துறை முனைப்பு காட்டியது. இதன் காரணமாகவே சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வரலாற்று மற்றும் இலக்கிய தரவுகளின் அடிப்படையில் கட்டாய மதமாற்றம் குறித்த தீங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் கட்டாய மதமாற்றம் ஆகியவற்றை கவனப்படுத்தும் நோக்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

எனது மகளின் வழக்கு சார்ந்த சூழலை கருத்தில் கொண்டு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்த கருத்துகள் சரியானவை. மேலும் அந்த கருத்துக்கள் எவ்விதத்திலும் நியாயமான பாரபட்சமற்ற விசாரணையை பாதிக்காது. எந்த ஒரு தனி நபர் மீதும் தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தாது.

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்கான காரணங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடும் பட்சத்தில், அதற்குரிய பதில் மனு தனது சார்பில் தாக்கல் செய்யப்படும்.

எனவே மேற்கண்ட காரணங்களால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தகுதியற்று இருப்பதால் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.


Next Story