காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரருக்கு டி.ஜி.பி. இறுதியஞ்சலி


காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரருக்கு டி.ஜி.பி. இறுதியஞ்சலி
x
தினத்தந்தி 5 April 2022 8:31 AM IST (Updated: 5 April 2022 8:31 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரருக்கு இறுதியஞ்சலி செலுத்திய டி.ஜி.பி., பயங்கரவாத தாக்குதல்களை ஒருபோதும் சகித்து கொள்ளமாட்டோம் என கூறியுள்ளார்.




ஸ்ரீநகர்,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் மைசுமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து திடீரென வீரர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) 2 பேர் காயமடைந்தனர்.  உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.  இதேபோன்று, புல்வாமா மாவட்டத்தின் லஜூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.  இதில், குடிமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக, அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர் விஷால் குமாரின் உடல் புத்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.  இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புத்காம் நகரில் இன்று நடந்தது.  இதில், ராணுவ உயரதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.  காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாங்கள் இந்த பயங்கரவாத தாக்குதல்களை சகித்து கொள்ளமாட்டோம்.  நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரருக்கு நாங்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம்.  அமைதி நீடிக்க தேவையான எங்களது பணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.


Next Story