22 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதால் 22 யூ-டியூப் சேனல்களை முடக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் யூ-டியூப் சேனல்கள், இணையதளங்கள் உள்ளிட்டவை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 20 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து ஜனவரி மாதம் 35 யூ-டியூப் சேனல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது.
மேலும் உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியதாக அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதால், மேலும் 22 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 18 யூ-டியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்தும், 4 யூ-டியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்தும் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story