காத்திருந்தது வீண்..! காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலின் மகன் பா.ஜ.கவில் இணையலாம்..!
“காத்திருந்து சலித்துவிட்டது. மேலிடத்திலிருந்து எந்த ஊக்கமும் இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த அகமது பட்டேலின் மகன் பைசல் பட்டேல் காங்கிரசின் தொடர்பிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த 41 வயதான பைசல் பட்டேலின் இந்த முடிவு, சிதைந்து போன நிலையில் இருக்கும் பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக கருதப்படுகிறது.
காங்கிரசின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சிறப்பான ஆற்றல் பொருந்திய அகமது பட்டேலின் மகன் தான் பைசல் படேல். காந்தியடிகளின் தீவிர விசுவாசியான அகமது பட்டேல், கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்பவராக திகழ்ந்தவர்.
கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் நெருங்கிய நட்பு கொண்ட அகமது பட்டேல், 2020ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதன்பின் அவருடைய மகன் பைசல், எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.
முதன்முறையாக அரசியலில் களம் காண உள்ள பைசல், காங்கிரஸ் தலைமையிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும், அறிகுறிகளும் தென்படாததால், அவர் அதிருப்தியில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் என தெரிகிறது.
விரைவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில், அவர் வேறு கட்சியில் இணைந்து அரசியல் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி, கடந்த காலங்களில், அதன் பல தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி மாறுவதைக் கண்டுள்ளது. தற்போது அதன் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், பைசல் பட்டேல் டுவிட்டரில், “காத்திருந்து சலித்துவிட்டது. மேலிடத்திலிருந்து எந்த ஊக்கமும் இல்லை. எனது விருப்பங்களைத் திறந்து வைத்துவிட்டேன்..” என்று பதிவிட்டுள்ளார்.
Tired of waiting around. No encouragement from the top brass. Keeping my options open
— Faisal Patel (@mfaisalpatel) April 5, 2022
காங்கிரசின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது.
பைசல் தவிர,பல மூத்த கட்சி தலைவர்கள் (ஜி-23 என அழைக்கப்படுபவர்கள்) கட்சித் தலைமையில் சீர்திருத்தம் செய்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைமையில் சீர்திருத்தத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்து உள்ளனர்.
கட்சி தலைமை தனது கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத காரணத்தால், அவர் அதிருப்தியில் இந்த முடிவுக்கு வந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.
Related Tags :
Next Story