டெல்லியில் இறைச்சி விற்க தடை; 'இறைச்சி உண்பது அரசியலமைப்பு அளித்த உரிமை' -திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
தெற்கு டெல்லி மாநகராட்சி இறைச்சிக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நவராத்திரி பண்டிகையானது, ஏப்ரல் 2 முதல் 11 வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தெற்கு டெல்லி மாநகராட்சி, 2022ம் ஆண்டு நவராத்திரி பண்டிகை காலத்தில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளது.
தெற்கு டெல்லியில் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டது தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நவராத்திரி காலத்தில் இறைச்சி சாப்பிடுவதும் விற்பதும் “அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பி.யுமான மஹுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "நான் தெற்கு டெல்லியில் வசிக்கிறேன். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் கடைக்காரர் தனது வர்த்தகத்தை நடத்தும் சுதந்திரத்தையும் அனுமதிக்கிறது. ‘முற்றுப்புள்ளி’.” என்று பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அரசியலமைப்புச் சட்டம் எனக்கு இறைச்சியை உண்ணவும், கடைக்காரர் தனது வியாபாரத்தை நடத்தவும் சுதந்திரம் அளித்திருக்கும் போது எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்று ஆவேசப்பட்டார்.
I live in South Delhi.
— Mahua Moitra (@MahuaMoitra) April 6, 2022
The Constitution allows me to eat meat when I like and the shopkeeper the freedom to run his trade.
Full stop.
தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூர்யன் சமீபத்தில் அறிவித்திருப்பதாவது, “நவராத்திரி பண்டிகையின் போது செயல்படாமல் இருக்க சம்மதித்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இறைச்சி கடைகள் நடத்த உரிமம் வழங்கப்படும்.
ஏப்ரல் 2 முதல் 11 வரை திறந்திருக்கும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நவராத்திரியின் போது மதுபானங்கள் மீதான தள்ளுபடி விலையை திரும்ப பெறுமாறு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளேன். முடிந்தால், ஒன்பது நாட்களுக்கு மது விற்பனையை நிறுத்தவும் கூறியிருக்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெற்கு டெல்லி மாநகராட்சியின் முடிவை பின்பற்றி, நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் அப்பகுதியில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மாநகராட்சிகளின் முடிவுக்கு அரசியல் தலைவர்கள் உமர் அப்துல்லா மற்றும் அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மறுமுனையில், டெல்லி பாஜக தலைவர் எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா இந்த முடிவை ஆதரித்தார்.
அவர் கூறும்போது, "நவராத்திரி விழா என்பது மக்கள் விரதங்கள் நடத்தி அம்மனை வழிபடுவது. முஸ்லீம் சமூகமாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் இதனை மதிக்க வேண்டும் என்று நமது கலாச்சாரம் நமக்கு கூறுகிறது” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story