இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்...! அல்கொய்தா தலைவருக்கு மாணவி முஸ்கான் தந்தை பதிலடி


இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்...! அல்கொய்தா தலைவருக்கு மாணவி முஸ்கான் தந்தை பதிலடி
x
தினத்தந்தி 7 April 2022 10:48 AM IST (Updated: 7 April 2022 10:49 AM IST)
t-max-icont-min-icon

இது முற்றிலும் தவறு, இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம் ...? என்று அல்கொய்தா தலைவருக்கு மாணவி முஸ்கானின் தந்தை பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்து போராட்டம் நடத்தினர்.

 அதுபோல் மண்டியா மாவட்டத்தில் பி.யூ. கல்லூரியில் படித்து வரும் முஸ்கான் கான் என்ற மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தார். அப்போது அங்கு காவி துண்டு அணிந்தபடி ஊர்வலமாக வந்த இந்து மாணவர்கள், மாணவி முஸ்கான் கானை சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர்.

அவர்களுக்கு எதிராக மாணவி முஸ்கான் ‘அல்லாகூ அக்பர்’ என்று பதில் கோஷமிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோவைப் பார்த்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்சவாஹிரி மாணவி முஸ்கான் கானை வெகுவாக பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அவர் மாணவி முஸ்கான் கானை, ‘எங்களது முஜாஹித் சகோதரி’ என்றும், ‘துணிச்சலான சாதனை’ என்றும் கூறி பாராட்டி இருக்கிறார். மேலும் அவர், ‘இந்து இந்தியாவில் எங்களது உண்மை நிலையை வெளிப்படுத்திய சகோதரி முஸ்கான் கானுக்கு அல்லா வெகுமதி வழங்கட்டும்’ என்று கூறியிருக்கிறார்.

 இந்த நிலையில் மாணவி முஸ்கான் கானின் தந்தை முகமது உசேன் கான் இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், ‘இது முற்றிலும் தவறு. நானும், என் குடும்பத்தினரும் இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் குடும்பத்தின் அமைதியை பாதிக்கும் வகையில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. அந்த வீடியோ குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அய்மான் அல்சவாஹிரி யார் என்றே எனக்கு தெரியாது. இன்று(நேற்று) தான் அவரை முதன்முதலில் பார்த்திருக்கிறேன். அவர் அரேபிய மொழியில் பேசியிருக்கிறார். நாங்கள் எல்லோரும் அன்பு, நம்பிக்கையுடன் சகோதரர்களாக ஒற்றுமையாக வசித்து வருகிறோம். இந்த விஷயம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

மக்கள் இதுபற்றி என்ன வேண்டுமானால் பேசலாம். இது தேவையில்லாமல் எங்களுக்கு தொல்லை ஏற்படுத்தும். அவர் எங்களைப் பற்றி பேசுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று கூறினார்.

இதுபற்றி கூறிய மாணவி முஸ்கான் கான், ‘அல்கொய்தா தலைவர் கூறியது முற்றிலும் தவறு’ என்று தெரிவித்தார். இந்த வீடியோ குறித்தும், அதன் பின்னணி குறித்தும், மாணவிக்கும், அல்கொய்தா அமைப்புக்கும் ஏதாவது ஒரு வழியில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் எஸ்.ஐ.டி.இ. நுண்ணறிவு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story