பெங்களூரு; மசூதிகளில் ஒலிபெருக்கிகள் நீக்கப்பட்டதை போல கோயில்களிலும் பின்பற்றப்பட வேண்டும் - தலைமை காதீப்
மசூதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒலிபெருக்கிகளால், அதிக சத்தம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒலிபெருக்கிகளால், அதிக சத்தம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது.
பெங்களூருவில் ஒலி பெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.
இதையடுத்து, மசூதிகள், கோவில்கள், பிற பகுதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாடு குறித்து கர்நாடக ஐகோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதாவது எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒலியை அளவிடும் டெசிபல் மீட்டரை பொருத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறி இருந்தது.
கடந்த 6 மாதங்களாக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாத மசூதிகள், கோவில்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று, ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவிற்குள் பயன்படுத்துமாறு மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உட்பட 301 நிறுவனங்களுக்கு, பெங்களூரு போலீஸ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள பார்கள்,பப்புகள் மற்றும் உணவகங்களுக்கு 59 நோட்டீஸ்கள், தொழிற்சாலைகளுக்கு 12, கோவில்களுக்கு 83, தேவாலயங்களுக்கு 22, மசூதிகளுக்கு 125 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒலிபெருக்கிகளில் வரும் சத்தம் தொடர்பான விவகாரம் குறித்து பெங்களூரு ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் மற்றும் கதீப், முகமது எம் இம்ரான் ரஷதி கூறியதாவது,
“மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளில் தேவைக்கேற்ப ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே இனி பிரச்சினை எழாது.
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனைத்து அறிவிப்புகளையும் நாங்கள் பின்பற்றுவோம். இதேபோல், கோவில்களும் பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பாக கோவில்களுக்கும் நோட்டீஸ் வந்துள்ளது. நாம் அனைவரும் விதிகளைப் பின்பற்றினால், எந்த பிரச்சனையும் இருக்காது.
பாகுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் தான் இத்தனை பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. ஐகோர்ட்டின் அறிக்கை மசூதிகளில் மட்டுமல்ல, அனைத்து ஒலிபெருக்கி பயன்பாட்டு தலங்களுக்கும் பொருந்தும்” என்றார்.
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா கூறியதாவது, “ஆளும் பாஜக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காக, வகுப்புவாதப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி கையாள்கிறது. ஒலிபெருக்கி விவகாரம் அடுத்த தேர்தலில் பாஜக அரசை கவிழ்க்கும்” என்றார்.
“ஐகோர்ட் நிர்ணயித்துள்ள ஒலி டெசிபல் அளவு, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும்” என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் கே சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story