புல்டோசர் நடவடிக்கை அச்சம்; குடும்பத்துடன் சரண் அடைந்த பலாத்கார கும்பல்
உத்தர பிரதேசத்தில் போலீசாரின் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் குடும்பத்துடன் போலீசில் சரண் அடைந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறியுள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டுல் முதல்-மந்திரியாக ஒரு மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது ஆட்சியில் அடாவடித்தனம் செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலின்போது பிரசாரத்தில் கூட யோகி பேசும்போது, நாங்கள் புல்டோசர் இயந்திரங்களை வைத்துள்ளோம். இந்த புல்டோசர்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டலாம், அதேசமயம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோரின் (மாபியாக்கள், ஊழல் மந்திரிகள்) கரங்களை ஒடுக்கலாம் என்று ஆவேசமுடன் கூறினார்.
இந்நிலையில், அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் ஜியுலி கிராமத்தில் ஜைத்புர் பகுதியில் கடந்த மார்ச் 29ந்தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர்.
இதில், விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகளை அடையாளம் கண்ட பின்பு அவர்களது குடும்பத்தினரை அழைத்து, உடனடியாக தொடர்புடைய நபர்களை சரணடையும்படி கூறுங்கள். தவறினால் புல்டோசரை கொண்டு உங்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளான 5 பேர் கொண்ட கும்பல் தங்களது குடும்பத்துடன் போலீசில் சரண் அடைந்துள்ளது.
இதுபற்றி, அம்பேத்கார் நகர் காவல்நிலைய போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புல்டோசர் எச்சரிக்கை, துப்பாக்கி குண்டுகள் மீது அச்சம் மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கை ஆகியவற்றால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் ஜைத்பூர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்து சரணடைந்து, போலீசாரின் முன் கைகளை கட்டி கொண்டு, தங்களது செயல்களுக்காக மன்னிப்பு கேட்டனர் என்று காவல் அதிகாரி ஜெய்பிரகாஷ் சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story