குஜராத்தில் ஒருவருக்கு ’எக்ஸ்இ’ வகை கொரோனா பாதிப்பு?


குஜராத்தில் ஒருவருக்கு ’எக்ஸ்இ’ வகை கொரோனா பாதிப்பு?
x
தினத்தந்தி 9 April 2022 2:33 PM IST (Updated: 9 April 2022 2:33 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை இன்னும் அச்சுறுத்தி வருகிறது.

காந்திநகர், 

சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு உலக அளவில் வேகமாக பரவி மிரட்டிய நிலையில், ஒமைக்ரான் வகையில் பிறழ்வு அடைந்த எக்ஸ்இ வகை கொரோனா இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 

ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக சொல்லப்பட்ட இந்த எக்ஸ்இ வகை கொரோனா,  இந்தியாவிலும் ஒருவருக்கு பரவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனாவும், எக்ஸ்எம் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாக ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுபற்றிய கூடுதல் தரவுகள் எதையும் தெரிவிக்கவில்லை. புதியவகை கொரோனா பாதித்த இருவரின் உடல் நிலை குறித்தும் அதிகாரிகள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

முன்னதாக இந்த வார துவக்கத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மும்பை நபர் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும், இதை நிராகரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு புதிய வகை கொரோனா பாதிப்புதான் இது என வரையறுக்க முடியாது எனக்கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. 

Next Story