"ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது"; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களில் கவர்னரை வைத்து ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல என முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
கண்ணூர்,
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில மாநாடு, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநாட்டிற்கு என்னை அழைத்து மத்திய - மாநில உறவுகள் குறித்து நான் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதை முதலில் நான் எண்ணிப் பார்க்கிறேன்.
இந்த மாநாடு நடக்கும் இடம் கேரளா! மத்திய - மாநில உறவுகள் குறித்துப் பேச வந்திருக்கும் நான் தமிழ்நாடு! இதை விட மிகப்பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன்முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்துக்கு 1959-ஆம் ஆண்டு இது நடந்தது.
தமிழ்நாட்டிலும் மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு முதல்முறையும் - 1991-ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் இது நடந்தது.
எனவே மத்திய - மாநில உறவுகளைப் பற்றி பேசுவதற்கான முழு உரிமையும் தமிழ்நாட்டுக்கும் உண்டு. கேரளாவுக்கும் உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. அந்த அடிப்படையில் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
நான் ஏதோ தமிழ்நாட்டைக் காப்பதற்காக மட்டுமோ - பினராயி விஜயன் அவர்கள் கேரளாவைக் காப்பாற்றுவதற்கு மட்டுமோ - இந்த முழக்கத்தை முன்வைக்கவில்லை. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் - முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் சேர்ந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு.
ஆனால் சிலர் அரசியல் அரிச்சுவடியையே மாற்றுகிறார்கள். 'ஒரு உடலுக்குள் பல உறுப்புகளாக ஒன்றிணைந்துள்ளோம்' என்று தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் பாடினார். உறுப்புகள் இல்லாவிட்டால் உடலே இல்லை.
இந்தியாவில் எத்தனையோ மதங்கள் - எத்தனையோ இனங்கள் -எத்தனையோ மொழிகள் - பண்பாடுகள் - கலாச்சாரங்கள் - பழக்க வழக்கங்கள் - உடைகள் - உணவுகள் இருக்கின்றன.
இத்தனை வேறுபாடுகள் - மாறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு ஆகும். இந்த வேற்றுமையுடன்தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.
ஆனால் இந்த வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள்.
ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே உணவு - ஒரே தேர்வு - ஒரே கல்வி - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே கலாச்சாரம் - என்று எல்லாவற்றையும் ஒரே - ஒரே - ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும்.
ஒரே கட்சியானால் - ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. ஒரே கட்சி என்று ஆகும் வரை பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும்போது நம்மோடு சேர்ந்து பா.ஜ.க.வினரும் எதிர்க்கத்தான் வேண்டும். இத்தகைய எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்தான் 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது ஆகும்.
கிராமங்கள் வளர வேண்டும். கிராமங்கள் வளர்ந்தால் மாநிலம் வளரும். மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்று இதன் காரணமாகத்தான் நான் சொன்னேன். கிராமங்களை, மாநிலங்களை அழிக்க நினைப்பவர்களாக ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பைக் கடந்து தனது அதிகார எல்லையை விரித்துச் செல்கிறது மத்திய அரசு.
இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆண்டார்கள். அவர்கள் கூட இத்தகைய அதிகாரம் பொருந்திய ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை. அதிகாரத்தைக் கையில் வைத்திருந்து அடக்கியாளும் எண்ணத்தோடு இருந்த ஆங்கில ஆட்சிகூட செய்யாததை இன்றைய பா.ஜ.க. அரசு செய்கிறது என்று வெளிப்படையாகவே நான் குற்றம் சாட்டுகிறேன்.
மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யும் மாநிலங்களை - மத்திய அரசை நோக்கிக் கையேந்த வைப்பதில்தான் மத்திய ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் - அது மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா!அது மக்களைப் பழிவாங்குவது ஆகாதா!
மாநிலங்களைப் பழிவாங்குவதாக நினைத்து மக்களைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தின் நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தார்கள். வரி வருவாயைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாகச் சொன்னார்கள். இழப்பீடு முழுமையானதாக இல்லை. அந்த அரைகுறை இழப்பீடும் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.
மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை. தமிழ்நாட்டுக்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வரவேண்டி உள்ளது.இதையெல்லாம் நாம் கேட்க வேண்டிய இடம் திட்டக்குழு. திட்டக்குழு இருந்தால்தானே கேட்பீர்கள். அதையே கலைத்துவிடுகிறோம் என்று கலைத்துவிட்டார்கள்.
தென்னகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு பணமே ஒதுக்குவது இல்லை. அதுபற்றி விவாதம் இருந்தால்தானே கேட்பீர்கள்? ரயில்வேக்கு தனியான பட்ஜெட்டே கிடையாது.மாநிலப்பட்டியலில் இருக்கும் வேளாண்மைக்கும் அவர்களே சட்டம் போடுவார்கள். அது பற்றி விவாதம் நடத்தமாட்டார்கள். எந்தச் சட்டத்தையும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வார்கள்.நாடாளுமன்றத்தில் எதற்கும் சிறப்பு விவாதம் நடத்துவது இல்லை. உரிய பதில் சொல்வது இல்லை.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும் ஆளுநரை வைத்து அமல்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை இருக்கும்போது, ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்லவா? இதனை ஒரு ஒன்றிய ஆட்சியே செய்யலாமா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாகத் தனியாட்சி நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சியா?
தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழகத்திலுள்ள மாநில ஆளுநர் தாமதித்து வருகிறார்; நாள் கடத்தி வருகிறார். சட்டத்தின்படிதான் ஆளுநர் நடக்கிறாரா? நீட் மசோதா மட்டுமல்ல - 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் அனுமதி தரமறுப்பதற்கு என்ன காரணம்?
எட்டுகோடி மக்களை விட நியமன ஆளுநருக்கு அதிகாரம் வந்துவிடுகிறதா? இப்படித்தான் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கிறது என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?
இன்று தமிழ்நாடு முதலமைச்சரான நானாக இருந்தாலும் - கேரள முதலமைச்சரான பினராயி விஜயனாக இருந்தாலும் - தலையாட்டி பொம்மைகளாக இருந்தால் நமது ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள்.
தலையாட்டி பொம்மையாக நாம் இருக்க வேண்டுமா? இதுதான் என் கேள்வி.
ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக திட்டங்கள் தீட்டினால் - கல்வி உரிமையைப் பேசினால் - நமது தென்னகத்தின் பண்பாட்டைப் பற்றி பேசினால் - சமதர்மக் கொள்கைகளைப் பேசினால் - உடனடியாக நமது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்கும் தலைவர்கள் அனைவரும் இத்தகைய முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
சட்டமன்றத்தாலும் - நீதிமன்றத்தாலும் - மக்கள் மன்றத்தாலும் - இதனை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும்.
தென்மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதலமைச்சர்கள் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஒற்றுமைதான் பலம் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும்.பன்முகத்தன்மை - கூட்டாட்சித் தத்துவம் - ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - மாநில உரிமைகள் - கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மன மாச்சரியங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்" என்று நான் குறிப்பிட்டேன். அதே வேண்டுகோளைத்தான் இங்கும் வைக்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story