ஜல்ஜீவன் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி


ஜல்ஜீவன் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 10 April 2022 12:00 AM IST (Updated: 10 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஜல்ஜீவன் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று பிரதமர் மோடி டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

புதுடெல்லி, 

பா.ஜனதாவின் நிறுவன தினத்தையொட்டி ‘சமூக நீதிக்கான 15 நாட்கள்’ என்ற பிரசாரத்தை அந்த கட்சி நடத்துகிறது. இதன்மூலம் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஜல்ஜீவன் திட்டத்தின் பயன்கள் குறித்து நேற்று விளக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டுவரை, 16.75 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 48.6 சதவீத வீடுகள் இந்த இணைப்பை பெற்றிருப்பதாக பா.ஜனதா கூறியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி ஜல்ஜீவன் திட்டத்தை அறிவிக்கும்போது, நாடு முழுவதும் 3.23 கோடி வீடுகள் குடிநீர் இணைப்பு பெற்றிருந்தன. தற்போது, அந்த எண்ணிக்கை 9.4 கோடியாக அதிகரித்து இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

107 மாவட்டங்களில் 1.5 லட்சம் கிராமங்கள் தற்போது குடிநீர் இணைப்பை பெற்றிருப்பதாக கூறிய திரிவேதி, 17.29 லட்சம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளும் இணைப்பு பெற்றிருப்பதாகவும் கூறினார். 

இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘ஜல்ஜீவன் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு தண்ணீர் சென்றடைந்த விதம் பொதுமக்களின் விருப்பங்களுக்கும், அவர்களின் பங்களிப்புக்கும் சிறந்த உதாரணம்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.


Next Story