சரத்பவார் வீட்டின் முன் நடந்தது, கொலை முயற்சி சம்பவம்- சிவசேனா பெண் தலைவர்


சரத்பவார் வீட்டின் முன் நடந்தது, கொலை முயற்சி சம்பவம்- சிவசேனா பெண் தலைவர்
x
தினத்தந்தி 10 April 2022 2:23 AM IST (Updated: 10 April 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் வீட்டின் முன் நடந்த போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் கொலை முயற்சி சம்பவம் என சிவசேனா பெண் தலைவர் நீலம் கோரே கருத்து கூறியுள்ளார்.

போராட்டம்

மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டின் முன் நேற்று முன்தினம் திடீரென போக்குவரத்து கழக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது சிலர் செருப்பு, கற்களை சரத்பவாரின் வீட்டை நோக்கி வீசினர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கொலை முயற்சி சம்பவம்

இந்தநிலையில் சரத்பவாா் வீட்டு முன் நடந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் கொலை முயற்சி சம்பவம் என சிவசேனாவை சேர்ந்த மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " போராட்டக்காரர்கள் கேட்டை தள்ளியவிதம், நான் கவனித்த வரை அவர்கள் சரத்பவார், சுப்ரியா சுலே மற்றும் குடும்பத்தினரை காயப்படுத்தவே விரும்பி உள்ளனர். அந்த குடும்பத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை கடைசி தாக்குதலாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் கூட தாக்கப்படலாம். இதுகுறித்து தகவல்களை போலீசார் சேகரிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா என தெரியவில்லை. ஆனால் அது ஒரு கொலை முயற்சி போல தான் இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செல்வாக்குமிக்க சிலரின் ஆதரவு இருப்பது போல தெரிகிறது " என்றார்.


Next Story