18 வயது மேற்பட்டோருக்கு இன்று முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி..!!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 10 April 2022 9:29 AM IST (Updated: 10 April 2022 9:29 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் இன்று முதல் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் எனத் தெரிகிறது. 

எனினும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

Next Story