அந்தமான் நிகோபர் தீவில் 2வது முறையாக நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று ஒரே நாளில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.
இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே என்ற பகுதியில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ. தொலைவில் இன்று மாலை 4.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
Related Tags :
Next Story