வேலை வாங்கி தருவதாக 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 6 பேர் கைது


வேலை வாங்கி தருவதாக 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 6 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2022 3:13 PM IST (Updated: 11 April 2022 3:13 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூணாறு,

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (51). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரை ஒரு மாதத்திற்கு முன்பு தொடுபுழா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் சந்தித்துள்ளார். தனது குடும்பத்தில் தந்தை இல்லை, தாயும் உடல் நலம் பாதிப்படைந்துள்ளார். குடும்பத்தில் வறுமை அதிகமாக இருப்பதால் தனக்கு எங்கேயாவது ஒரு வேலை வாங்கித் தருமாறு பேபியிடம் அந்த இளம் பெண் கூறியுள்ளார்.

அதற்கு பேபி தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை பயன்படுத்தி பேபி அந்த இளம்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அவ்வாறு அழைத்து சென்ற இடத்தில் 5 பேர் அந்தப் பெண்ணுக்கு வேலை தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஆனால் யாருமே வேலை தராததால், ஒரு கட்டத்தில் பேபி தன்னை பயன்படுத்தி லாபம் பெறுவதாக அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இது குறித்து அந்தப் பெண் தொடுபுழா போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் தொடுபுழா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜிம் போல், தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒர்க்‌ஷாப் ஊழியர் தாமஸ் சாக்கோ (27), லாட்டரி விற்பனை செய்யும் பினு (43), மின்சார துறை ஊழியர் சஜீவ் (55), தங்கப்பன் (58), ஜான்சன் (50), ஆகிய ஐந்து பேர்களையும், இதற்கு உடந்தையாக இருந்த பேபி (51), ஆகிய ஆறு பேர்களை தொடுபுழா போலீஸ் நேற்று கைது செய்தனர்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் மீது தொடுபுழா போலீஸ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story