கம்பு, தடிகளை கொண்டு இடதுசாரி மாணவர்கள் தாக்குதல்; ஏ.பி.வி.பி. குற்றச்சாட்டு


கம்பு, தடிகளை கொண்டு இடதுசாரி மாணவர்கள் தாக்குதல்; ஏ.பி.வி.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 April 2022 3:21 PM IST (Updated: 11 April 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் இடதுசாரி அமைப்பு மாணவர்கள் கம்பு, தடிகளை கொண்டு எங்களை தாக்கினர் என்றும் ஏ.பி.வி.பி. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,



டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் ராமநவமியை முன்னிட்டு நேற்று இரவு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இந்த நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஏ.பி.வி.பி. (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர் என கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.  எனினும், 60 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என்று இரு தரப்பினரும் தெரிவித்து உள்ளனர்.  ஒரு சில மாணவிகளுக்கு மண்டையில் ரத்தம் கொட்டி வழிந்தோடியது.

அவர்களை சக மாணவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க முற்பட்டதில் மோதல் ஏற்பட்டது என ஜே.என்.யூ. மாணவர் அமைப்பு இன்று குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

இதனை அந்த அமைப்பு மறுத்துள்ளது.  இந்நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்திற்கான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ரோகித் குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.  அதில் அவர் கூறும்போது, அசைவ உணவுக்கு எங்களுடைய அமைப்பு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

கல்லூரி விடுதியில் நடக்க இருந்த ராமநவமி பூஜையை சீர்குலைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.  விடுதியில், ஒரே நேரத்தில் இப்தாரும், பூஜையும் நடந்தது.  இதில், இந்து திருவிழாவை கொண்டாடுவதற்கு இடதுசாரியினர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ராமநவமி வருவதற்கு ஒரு நாள் முன்பே எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.  அதில், ராமநவமி பூஜையில் எலும்புகளை வீசுவோம் என தெரிவித்திருந்தனர்.  கொண்டாட்டங்களை நிறுத்துவதற்காக போலி நோட்டிசை அவர்கள் (இடதுசாரி மாணவ அமைப்பினர்) அனுப்பினர் என கூறியுள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் ஒவ்வொரு முறை நிகழ்ச்சி நடத்தும்போதும், இடதுசாரியினர் அதனை திசை திருப்பி, வன்முறையாக கொண்டு சென்று விடுகின்றனர்.

கல்லூரி வளாகத்திற்குள் கம்புகளை கொண்டு வந்து மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  காவேரி விடுதிக்குள் நுழைபவர்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.  எங்கள் மீது தாக்குதல் நடத்த கற்கள், டியூப் லைட்டுகள் ஆகியவற்றையும் இடதுசாரியினர் கொண்டு வந்தனர்.

பயன்படுத்தப்பட்ட பழைய தடிகள் மற்றும் டியூப் லைட்டுகளை கொண்டு மாணவர்களை அவர்கள் அடித்தனர்.  எங்களுடைய கொடிகளையும் அவர்கள் கிழித்து விட்டனர் என கூறியுள்ளார்.  எங்களுடைய தொண்டர்களும் காயமடைந்து உள்ளனர்.

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த பிரிவினர் மீது இடதுசாரியினர் நடத்திய திட்டமிடப்பட்ட தாக்குதல் இது என்று கூறியுள்ளார்.  எங்களுடைய அமைப்பும் போலீசாரிடம் மூன்று புகார்களை அளித்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story