பஞ்சாப்: எல்.கே.ஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கண்டனம் தெரிவித்து 5000 தனியார் கல்வி நிறுவனங்கள் மூடல்!


பஞ்சாப்: எல்.கே.ஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கண்டனம் தெரிவித்து 5000  தனியார் கல்வி நிறுவனங்கள் மூடல்!
x
தினத்தந்தி 11 April 2022 3:53 PM IST (Updated: 11 April 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் கடந்த வாரம் எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

லூதியானா,

பஞ்சாபில் கடந்த மாதம்  எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த குற்ற சம்பவம் தொடர்பாக  குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அந்த  தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். 

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று  மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் செயல்படும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இன்று(ஏப்ரல் 11) செயல்படக் கூடாது என்று பஞ்சாபின் தனியார் பள்ளிகள்  சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.

முன்னதாக, கடந்த மாதம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வந்த நான்கு வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வன்கொடுமை சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 

சம்பவம் நடந்த வியாழக்கிழமை மாலை, அந்த பிஞ்சு குழந்தை வலியால் துடித்துக் கொண்டு தனது தாயாரிடம் நடந்ததை கூறியிருக்கிறது. அந்த குழந்தைக்கு இரத்தப்போக்கும் இருந்ததை அதன் தாயார் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர். அப்போது மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்துவிட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பதை உறுதிபடுத்தினர். 

இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல், குழந்தையின் பெற்றோர் உட்பட அப்பகுதி மக்கள்  என அனைவரும் ஒன்றுசேர்ந்து அமிர்தசரஸ்-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து  சனிக்கிழமை அப்பள்ளியின் நிர்வாக இயக்குனர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, இந்த குற்ற வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், இப்போது அப்பள்ளியின் நிர்வாக இயக்குனர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் சுமார் 4000-5000 வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

சின்னஞ்சிறு குழந்தைக்கு எதிராக இத்தகைய கொடூர குற்றம் நடந்தது மனதை வருத்துகிறது. அதற்காக இதுபோன்றதொரு கொடூர குற்றத்தை செய்த நிஜ குற்றவாளிகளை கைது செய்வதை விட்டுவிட்டு, பள்ளியின் நிர்வாகிகளை கைது செய்வது சரியல்ல.

இதுபோன்றதொரு சம்பவம் அரசு பள்ளியில் நடந்திருந்தால், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையோ அல்லது மாவட்ட கல்வி அதிகாரியையோ போலீசார் கைது செய்திருப்பார்களா?

இந்த சம்பவத்தின் விசாரணைக்கு பள்ளி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது அவர்களை இப்படி துன்புறுத்த கூடாது.

பள்ளியின் கேமரா பதிவுகளில் சிறுமி பள்ளிக்குச் சென்றுவிட்டு தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகியுள்ளது. பள்ளியில் குற்றம் நடந்ததற்கான ஆதாரம் இல்லை.சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் மாலையில் நடந்து சென்றுள்ளார். அது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பெண் குழந்தைக்கு எதிரான இந்த சம்பவத்திற்கு பஞ்சாபில் உள்ள அனைத்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.ஆனால் பள்ளி நிர்வாகத்தை கைது செய்தது நியாயமில்லை.

இதனால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஏப்ரல் 11ஆம் தேதி மூடப்பட்டுள்ளன.

உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியலில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story