மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ராபர்ட் வதேரா பரபரப்பு பேட்டி


மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ராபர்ட் வதேரா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 11 April 2022 6:47 PM IST (Updated: 11 April 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.


உஜ்ஜைன்,



பூமியின் மைய பகுதியாக அமைந்துள்ள உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா (வயது 53) சாமி தரிசனம் செய்த பின்னர், உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான வதேரா பேசும்போது, அரசியலை புரிந்து வைத்திருக்கிறேன்.  மக்களுக்கான பிரதிநிதியாக நான் வரவேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அவர்களுக்கு சில மாற்றங்களை என்னால் கொண்டு வரமுடியுமென்றால், நிச்சயம் அரசியலுக்கு வரும் முடிவை நான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

அப்படி அரசியலுக்கு வந்து விட்டால், மக்களுக்கு என்னால் ஆன பெரிய அளவில் சேவை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

அறப்பணிகள் தொடரும்

என்னுடைய அறப்பணிகள் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நடந்து வருகின்றன.  வருங்காலத்திலும் அவை தொடரும்.  நான் அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்பதெல்லாம் விசயமில்லை.

இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  இதுவே, மக்களுக்கு நான் சேவை செய்யும் வழியாகும் என கூறியுள்ளார்.

என்னுடைய பெயரை பயன்படுத்தினால், பொதுஜனத்திற்கு நல்ல பணியை என்னுடைய ஆதரவாளர்கள் செய்வார்கள் என்று இந்த மக்களுக்கு நன்றாக தெரியும்.  அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஊடகங்கள் அச்சம்

இன்றைய அரசியல் தன்மை எப்படி? மற்றும் நாடு எப்படி உருமாறி கொண்டிருக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு நாளும் குடும்பத்துடன் நாங்கள் ஆலோசிப்பது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையை மக்களுக்கு காட்ட ஊடகங்கள் அச்சப்படுகின்றன என கூறியுள்ள அவர், இது ஜனநாயகத்தின் பகுதி அல்ல என்றும் இது நாட்டை பின்னோக்கியே இழுத்து செல்லும்.  முன்னோக்கி அல்ல என்றும் கூறியுள்ளார்.

10க்கு 10 மதிப்பெண்கள்

சமீபத்தில் நடந்து முடிந்த, 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? என்பது பற்றிய கேள்விக்கு, பிரியங்காவுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவேன்.  இந்த தேர்தலுக்காக அவர் அல்லும் பகலும் உழைத்துள்ளார்.

ஆனால், மாநில மக்களின் தீர்ப்பினையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும்.  முழுவீச்சில் அவர்களுக்கான சேவையை தொடர்ந்து செய்வோம் என்று பதிலளித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமல் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்காக பிரதமர் மோடியையும் தாக்கி பேசிய அவர், இந்து, முஸ்லிம் பிரிவினை நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.  மதசார்பற்ற நிலை தொடர்ந்து நீடிக்க அனைத்து மதநம்பிக்கைகளையும் நாடு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.




Next Story