உங்களிடம் காணொலி வாயிலாக பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக பெருமகிழ்ச்சி; பிரதமர் மோடி
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான காணொலி காட்சி வழியேயான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்து வருகிறது. இதில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என அறிவிப்பு வெளியானது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, நமது அரசாங்கங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக, ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியை காணொலி காட்சி வழியாக இன்று சந்திக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, உலக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்.
மேலும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் மிருகத்தனமான போரின் விளைவுகள் மற்றும் உலகளாவிய உணவு வழங்கல் மற்றும் பொருட்களின் சந்தைகளில் அதன் சீர்குலைக்கும் தாக்கத்தை தணிப்பது பற்றிய அமெரிக்காவின் நெருக்கமான ஆலோசனைகளை பைடன் வழங்குவார் என்று ஜென் சாகி கூறினார்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான காணொலி காட்சி வழியேயான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.
இதில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விஷயம் கவலைக்குரிய ஒன்றாக இருக்கும் தருணத்தில் நமது இந்த உரையாடல் நிகழ்கிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, உக்ரையில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி பரிதவித்து வந்தனர். அவர்களில் பலர் மாணவர்கள்.
உங்களுடனும், உங்களது இரு மந்திரிகள் மற்றும் தூதருடன் காணொலி வாயிலாக பேசும் சந்தர்ப்பத்தினை இன்று பெற்றதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா காலத்தில் நாம் சந்தித்த சர்வதேச அளவிலான சவால்கள், சுகாதார பாதுகாப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சில விசயங்களை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story