கடவுள் ராமரின் பெயரால் அரசியல் விளையாட்டில் சிவசேனா ஈடுபடுகிறது; பா.ஜ.க.


கடவுள் ராமரின் பெயரால் அரசியல் விளையாட்டில் சிவசேனா ஈடுபடுகிறது; பா.ஜ.க.
x
தினத்தந்தி 11 April 2022 11:04 PM IST (Updated: 11 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

கடவுள் ராமரின் பெயரால் அரசியல் விளையாட்டில் சிவசேனா ஈடுபடுகிறது என பா.ஜ.க. குற்றச்சாட்டாக கூறியுள்ளது.





மும்பை,



இந்துத்துவாவுக்கான காப்புரிமையை பா.ஜ.க. வைத்திருக்கவில்லை என்றும் காவி மற்றும் இந்துத்துவாவை இணைப்பது மத்தியில் ஆட்சி அமைக்க உதவும் என்று மறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரேதான் பா.ஜ.க.வுக்கு கற்று கொடுத்தார் என்றும் மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கோலாப்பூர் வடக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.  இதில், ஆளும் கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவை ஆதரித்து இணையம் வழியாக உத்தவ் தாக்கரே பிரச்சாரம் மேற்கொண்டார்.  அதில் அவர், பா.ஜ.க.வை கடுமையாக சாடினார்.  

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்திருந்தபோதிலும் சிவசேனா வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க.வே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், பா.ஜ.க.வைபோல்அல்லாமல் காவி மற்றும் இந்துத்துவாவில் சிவசேனா உறுதியாக உள்ளது. பாரதீய ஜன சங்கம், ஜனசங்கம் என பல பெயர்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. 2019 தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க. ரகசிய கூட்டணி வைத்திருந்ததா? 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019 தேர்தலில் (கோலாப்பூர் வடக்கில்) காங்கிரசின் வாக்குகள் அதிகரித்தன. 2019ல் பா.ஜ.க.வின் வாக்குகள் எங்கே போனது? என கேள்வி எழுப்பினார்.

இந்துத்துவாவுக்கு என பா.ஜ.க. காப்புரிமை வைத்திருக்கவில்லை. ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பா.ஜ.க. எதை வைத்து அரசியல் செய்திருக்கும். பேசுவதற்கு எந்த விவகாரமும் இல்லாததால் மதம் குறித்து பேசி வெறுப்பை பரப்பிவருகிறது

பா.ஜ.க. பால் தாக்கரேவை மதிப்பதாக கூறினால், நவிமும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த சிவசேனா நிறுவனர் பெயர் வைப்பதை அந்த கட்சி ஏன் எதிர்க்கிறது? நான் கோயிலாக கருதும் பாலாசாகேப்பின் அறையில் அமித்ஷா அளித்த வாக்குறுதியிலிருந்து பா.ஜ.க. ஏன் பின்வாங்கியது? இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே இன்று கூறும்போது, சிவசேனா கடவுள் ராமரின் பெயரை வைத்து கொண்டு அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறது.  பா.ஜ.க.வின் பெயரில் அல்ல.

ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் எங்களுடைய முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா இந்துத்துவா காப்புரிமையை விற்று விட்டது.  நாங்கள் அல்ல என கூறியுள்ளார்.

நாங்கள் தேர்தல் சின்னம் மட்டுமே மாற்றியுள்ளோம்.  அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டையே மாற்றிவிட்டனர்.  இந்துத்துவாவை நாங்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.

ஜனசங்கம் இருந்தபோதும், தற்போது பா.ஜ.க. இருக்கும்போதும்.  காலப்போக்கில் தேர்தல் சின்னம் மட்டுமே நாங்கள் மாற்றியிருக்கிறோம்.  சிவசேனா காலத்துக்கு ஏற்றாற்போல் அதனுடைய நிறங்களை மாற்றியுள்ளது.

நாட்டில் அவசரநிலை இருந்தபோது, எங்களுக்கு ஆதரவு வழங்கினார்கள்.  குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி நியமனம் செய்யப்பட்டபோது, காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர் என தன்வே கூறியுள்ளார்.






Next Story