‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’- நடிகை ரோஜா பேட்டி


‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’- நடிகை ரோஜா பேட்டி
x
தினத்தந்தி 12 April 2022 2:26 AM IST (Updated: 12 April 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மந்திரி சபை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரோஜா சுற்றுலாத்துறை மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

நகரி,

ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆனார்.

அப்போது 2½ ஆண்டுகளுக்கு பின்னர் மந்திரி சபை மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. மாநில தலைநகர் அமராவதியில் நடந்த விழாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் 13 பேர் புதுமுகங்கள். 11 பேர் முந்தைய மந்திரிசபையில் மந்திரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் கவர்னர் பிஸ்வா பூஷண் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் பிரபல நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவும் மந்திரி ஆனார். அவருக்கு சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

பின்னர் நடிகை ரோஜா கூறுகையில், ‘முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன். மந்திரி ஆகி விட்டதால் இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.

Next Story