குஜராத் தேசிய சட்ட பல்கலை கழகத்தில் 4 நாட்களில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு


குஜராத் தேசிய சட்ட பல்கலை கழகத்தில் 4 நாட்களில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2022 9:52 AM GMT (Updated: 12 April 2022 9:52 AM GMT)

குஜராத் தேசிய சட்ட பல்கலை கழகத்தில் கடந்த 4 நாட்களில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.




காந்திநகர்,



நாட்டில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக வெகுவாக குறைந்து 3வது அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  கடந்த 4ந்தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குள் வந்தது.  தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 861 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று புதிதாக 796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ள சூழலில் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களும் திறக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய சட்ட பல்கலை கழகத்தில் கடந்த 4 நாட்களில், இன்றுவரை 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இதுபற்றி நகராட்சி சுகாதார அதிகாரி கல்பேஷ் கோஸ்வாமி கூறும்போது, ஒருவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து வரிசையாக பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 55 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

தொடர் பரிசோதனையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.  இதனால், பல்கலை கழகத்தின் வளாகம், ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  பாதிக்கப்பட்ட அனைவரும் வளாக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

கடந்த 4 நாட்களில் 600க்கும் கூடுதலான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story