கேரளாவில் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்
கேரளாவில் கல்லூரி ஒன்றில் மொபைல் போன் வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி,
கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இதில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவ தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.
கனமழையை முன்னிட்டு மின்வினியோகம் தடைப்பட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மாணவர்கள் திகைத்து போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வெழுத மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
தேர்வு அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல கூடாது என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டு 2 மணிநேரம் ஒரு கையில் போனை பிடித்து கொண்டு மறுபுறம் தேர்வெழுதி உள்ளனர். அது ஒரு சுயாட்சி கல்லூரி என்ற வகையில், அதிகாரிகள் தேர்வை ரத்து செய்திருக்கலாம். மாணவர்களை மறுதேர்வை எழுதும்படி கூறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ரூ.77 லட்சம் செலவில் வாங்கிய ஜெனரேட்டர் (மின்உற்பத்தி சாதனம்) பயன்பாடு என்னவாயிற்று என்றும் மாணவர்களால் கேட்கப்பட்டு உள்ளது. இதுபற்றி கல்லூரி முதல்வர் அனில் கூறும்போது, தேர்வு சூப்பிரெண்டிடம் இருந்து விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம். அதனை தேர்வு நிலை குழு நாளை (புதன்கிழமை) ஆய்வு மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
இறுதி முடிவு, ஆட்சி குழு கூட்டத்தில் பேசி எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனினும் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கூறும்போது, தேர்வு கண்காணிப்பாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர்.
கல்லூரிக்காக ரூ.54 லட்சம், உயர்அழுத்த மின்சார லைன் பெற செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறொன்று நடந்துள்ளது. ஜெனரேட்டர் போன்ற மாற்று வசதிகளை முன்பே ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என கூறினார்.
தேர்வறையில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேர்வை அதிகாரிகள் ரத்து செய்திருக்கலாம். ஏனெனில், எங்களுடைய கல்லூரி சுயாட்சி அந்தஸ்து பெற்றது ஆகும் என்று மற்றொரு விரிவுரையாளர் கூறியுள்ளார். இதனால், கல்லூரி வட்டாரத்தில் நகைப்புக்கு உரியவர்களாக நாங்கள் ஆகி விட்டோம் என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story