20 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன; ஆதர் பூனாவல்லா
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்ட நிலையில் எங்களிடம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என ஆதர் பூனாவல்லா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவுகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து அதன்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
எனினும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.1,200 ஆகவும், கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோசின் விலை ரூ.600 ஆகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில், இரு தடுப்பூசி டோஸ்களின் விலையும், பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டு ரூ.225 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை சீரம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவல்லா மற்றும் பாரத் பயோடெக்கின் துணை நிறுவனர் சுசித்ரா எல்லா தங்களது டுவிட்டரில் அறிவித்தனர்.
இந்நிலையில், ஆதர் பூனாவல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பயன் பெறும் வகையில் கட்டண குறைப்பு செய்திருக்கிறோம்.
நாங்கள் கட்டண தொகையாக ரூ.225 வசூல் செய்கிறோம். நிர்வாக கட்டண தொகையாக மருத்துவமனை மற்றொரு ரூ.150 வசூலிக்கும். அதனால், ரூ.800 முதல் ரூ.900க்குள் தடுப்பூசி டோஸ் கட்டணம் இருக்கும் என கூறியுள்ளார்.
எங்களிடம் 20 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு முன்பே 4 கோடி டோஸ்களை ஏற்றுமதி செய்து விட்டோம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story