போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளும் முறையாக பயிற்சி பெறவில்லை என்ற காரணத்தால், போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை இயக்கிட, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை சேர்ந்த 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட 90 விமானிகளும் முறையாக பயிற்சி பெறவில்லை என்ற காரணத்தால், அவர்கள் அனைவரும் டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்தார்.
எனினும், இந்த கட்டுப்பாடு போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் செயல்பாடுகளை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தற்போது 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. இந்த 11 விமானங்களை இயக்க சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க முறையான பயிற்சி பெற்ற 650 விமானிகளில், தற்போது 560 பேர் தொடர்ந்து பணியில் உள்ளனர் என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தினசரி 60 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில், இந்த விமான சேவைகள் பாதிக்கப்படாது எனவும் வழக்கம் போல ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story