உ.பி.யில் பலத்த காற்று வீசி இரும்பு கம்பம் சரிந்தது; உயிர் தப்பிய மத்திய மந்திரி
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்று வீசி இரும்பு கம்பம் விழா மேடையில் சரிந்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் பீம்நகர் பகுதியில், நாட்டுக்கு அரசியல் சாசனம் இயற்றி தந்த பீமராவ் அம்பேத்காரின் 131வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு அழைப்பு விடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி மேடையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், திடீரென அந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், நிகழ்ச்சி நடந்த பகுதியில் இருள் சூழ்ந்தது. விழாவில் கலந்து கொண்டவர்கள் அச்சமடைந்தனர்.
இந்த சூழலில், காற்று வீசியதில் விழாவில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பம் ஒன்று சரிந்து மேடையருகே விழுந்துள்ளது. அதில் இணைக்கப்பட்டு இருந்த பல மின் விளக்குகளும் உடைந்து நொறுங்கின.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் கிடந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அதிர்ஷ்டவசத்தில் இந்த விபத்தில் இருந்து மத்திய மந்திரி மேக்வால் உயிர் தப்பியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story