உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியாவுக்கு பாதுகாப்பு தளவாட உதிரிபாகங்கள் வழங்கியது, ரஷியா
உக்ரைன் போருக்கு மத்தியிலும், இந்தியாவுக்கு ரஷியா அதிநவீன வான் பாதுகாப்பு தளவாட உதிரிபாகங்களை வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
ரஷியாவுடன் இந்தியாஒப்பந்தம்
பகை நாடுகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கிற வகையில், ரஷியாவிடம் இருந்து அதிநவீன ‘எஸ்-400 டிரையம்ப்’ ரக வான்பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
அந்த வகையில், 5 தளவாடங்களை ரூ.35 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு ரஷியாவுடன் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஒப்பந்தம் போட்டது.
சிறப்பம்சங்கள்
இந்த தளவாடம் ஒன்று, 40 கி.மீ. முதல் 400 கி.மீ. வரையில் பகை நாட்டின் விமானம், ஏவுகணை அல்லது ஆளில்லா விமானங்களை வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஒவ்வொன்றும் 600 கி.மீ. தொலைவில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை கண்காணிக்க முடியும். எந்த வான்வழி அச்சுறுத்தலை முதலில் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் வாய்ப்பை படைகளுக்கு வழங்குகிறது. வான் பாதுகாப்பு தளவாடத்தின் மற்றொரு சிறப்பம்சம், இது 4 வெவ்வேறு ஏவுகணைகளுடன் கூடியது என்பதாகும்.
உதிரிபாகங்கள் வினியோகம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நெருக்கடியிலும், ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த வான்பாதுகாப்பு அமைப்பிற்கான சிமுலேட்டர், அதனுடன் தொடர்புடைய பயிற்சி உபகரணங்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு ரஷியா வழங்கி உள்ளது.
அதே நேரத்தில், அதிநவீன ‘எஸ்-400 டிரையம்ப்’ ரக வான்பாதுகாப்பு தளவாடம் ஒன்றை மட்டுமே கடந்த டிசம்பரில் ரஷியா வினியோகித்துள்ளது. எஞ்சிய தளவாடங்கள் வினியோகம் 3 அல்லது 4 மாதங்கள் தாமதிக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெறப்பட்ட வான்பாதுகாப்பு தளவாடம், பாகிஸ்தானுக்காக மேற்கு செக்டாரில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டாவது தளவாடம் வந்ததும், அது சீனாவுக்காக கிழக்கு செக்டாரில் பயன்படுத்தப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
Related Tags :
Next Story