ஈசுவரப்பாவின் ராஜினாமா அங்கீகரிப்பு- கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவிப்பு


ஈசுவரப்பாவின் ராஜினாமா அங்கீகரிப்பு- கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2022 3:10 AM IST (Updated: 17 April 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஈசுவரப்பாவின் ராஜினாமாவை அங்கீகரிப்பதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்துள்ளார்.

ஈசுவரப்பா ராஜினாமா

கர்நாடகத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக இருந்தவர் ஈசுவரப்பா. இவர், காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீலிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கடந்த 12-ந்தேதி சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்துகொண்டார். மேலும் தனது சாவுக்கு ஈசுவரப்பா தான் காரணம் என வாட்ஸ்-அப்பில் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக ஈசுவரப்பா மீது உடுப்பி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையை சந்தித்து மந்திரி பதவி ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஈசுவரப்பா வழங்கினார்.

கவர்னர் அங்கீகரிப்பு

அந்த ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உடனடியாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஈசுவரப்பாவின் மந்திரி பதவி ராஜினாமாவை கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கீகரித்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கயைில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த ராஜினாமாவை நான் அங்கீகரித்துள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.


Next Story