கர்நாடகா: நள்ளிரவில் போலீஸ் ஸ்டேசன் மீது கல் வீசி தாக்குதல்; 12 போலீசார் படுகாயம் - 40 பேர் கைது
முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவை ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்காததால், நேற்று நள்ளிரவில் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பழைய ஹூப்ளி காவல் நிலையம் மீது நேற்றிரவு ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசார் படுகயமடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்ற சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் வாகனங்களும் அந்த கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த கும்பலை லத்தியால் அடித்தும் கன்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். இதனையடுத்து ஹூப்ளி நகரின் அனைத்து பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவை ஒருவர் பகிர்ந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது பதிவில் ஒரு மசூதியின் மேல் காவி கொடியை ஏற்றியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் அதையே தனது வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டிருந்தார்.போலீசார் அந்த நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எனினும், அந்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்காததால், நேற்று நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது “அவர்கள் மீது (கலவரக்காரர்கள்) கடுமையான நடவடிக்கை எடுக்க எங்கள் காவல்துறை தயங்காது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் கும்பலைத் தூண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள அமைப்புகளுக்கு, சட்டத்தை மீற வேண்டாம் என்பதை நான் கூற விரும்புகிறேன். அதை கர்நாடக அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்றார்.
Related Tags :
Next Story