2024 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா மாற்றத்தை உருவாக்குவார் - சத்ருகன் சின்கா பேட்டி
2024 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா மாற்றத்தை உருவாக்குவார் என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.
கொல்கத்தா,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி மாற்றத்தை உருவாக்குவார் என்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்ருகன் சின்கா கூறினார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர் சத்ருகன் சின்கா 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி மகிழ்ச்சியில் திளைத்து வரும் சத்ருகன் சின்கா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒருவர் சரியான திசையை அடைவதற்கு முன்பு நிறைய பயணம் செய்ய வேண்டும். பா.ஜனதா, காங்கிரஸ் என பயணம் செய்து, திரிணாமுல் காங்கிரஸ் என்ற சரியான திசையை அடைந்து விட்டேன். இனிமேல் மாற மாட்டேன்.
அசன்சோல் தொகுதியில் நான் வெற்றி பெற்றதற்கு மம்தா பானர்ஜியின் திறமையான தலைமையும், கட்சியினரின் உழைப்பும்தான் காரணங்கள். மம்தா பானர்ஜி, தெருவில் இறங்கி போராடுபவர் என்ற பெயருடன் அரசியலில் முன்னேறியவர்.
கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பாஜகவை அடியோடு வீழ்த்தினார். பணபலம், அதிகார பலத்தையும் மீறி, பாஜக தோல்வி அடைந்தது. அந்த வெற்றியால், மம்தா பானர்ஜி நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்டத்தையே மாற்றி அமைப்பவராக மம்தா பானர்ஜி இருப்பார். அவர் சொல்லும் செய்தியை நாடு முழுவதும் பரப்புவதுதான் எனது பணியாக இருக்கும்.என்னை வெளிநபர் என்று சொல்வது தவறு. நிறைய வங்காள மொழி படங்களில் நடித்துள்ளேன்.
தேர்தல் பிரசாரத்திலும் வங்காள மொழியில் பேசினேன். என்னை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காங்கிரஸ் சிக்கலான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story