விவசாயிகள் மகள்களின் கல்விக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க பஞ்சாப் எஸ்.பி. முடிவு
பஞ்சாப்பில் விவசாயிகள் மகள்களின் கல்விக்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க பஞ்சாப் எஸ்.பி. முடிவு செய்துள்ளார்.
சங்ரூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதன்பின்னர், கடந்த மார்ச்சில் நடந்த ராஜ்யசபை உறுப்பினர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் எம்.பி. பதவிக்கு நியமிக்கப்பட்டு, போட்டியின்றி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் அவர், தன்னுடைய எம்.பி. பதவிக்கான சம்பள தொகையை விவசாயிகளின் மகள்களுக்கான கல்வி மற்றும் பிற நலன்களுக்கு வழங்குவதற்கு விரும்புகிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான பணியில் பங்காற்றுவதற்கு என்னை இணைத்துள்ளேன். என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன். ஜெய்ஹிந்த் என்றும் அதில் அவர் பதிவிட்டார்.
இதேபோன்று பஞ்சாப்பில் உள்ள சங்ரூர் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மன்தீப் எஸ். சித்து, தனது முதல் சம்பள தொகையான ரூ.51 ஆயிரம் முழுவதும் நிதி நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மகள்களின் படிப்புக்கு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் ரூ.21 ஆயிரம் வழங்கவும் இருக்கிறார். அவர் பணியில் (சங்ரூரில்) இருக்கும் வரை இதனை தொடர முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர் பெருமிதமுடன் கூறும்போது, 3வது முறையாக சங்ரூர் நகரில் எஸ்.பி.யாக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக இதே பகுதியில் பணியாற்றி வருகிறேன். அதனால், இந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும். என்னால் முடிந்த சிறு முயற்சியிது.
சங்ரூரில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். நானும் ஒரு விவசாயியின் மகன். நிதி நெருக்கடியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது மகள்களின் படிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என நான் உணர்ந்தேன்.
இதற்கு முன்பு இதுபோன்ற திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், 3வது முறையாக இதே பகுதியில் பதவியேற்றதும், இந்த எண்ணம் எனக்குள் ஓடியது என்று கூறியுள்ளார்.
இவரது இந்த முடிவால், தூண்டப்பட்ட இரு தொழிலதிபர்கள் பணம் வழங்க முன் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ரூ.21 லட்சம் வழங்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். மற்றொரு தொழிலதிபர் ரூ.26 லட்சத்திற்கான காசோலை ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனால், தூரி பகுதியில் உள்ள 13 அரசு பள்ளி கூடங்களில் படிக்கும் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி செலவுக்கு இந்த ரூ.26 லட்சம் தொகை உபயோகப்படும். அவர்கள் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story