வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல்: போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிய கும்பல் - 88 பேர் கைது


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 18 April 2022 1:55 PM IST (Updated: 18 April 2022 1:55 PM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் போலீஸ் நிலையம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவின் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் அபிஷேக் ஹையர்மாத். இவர் உப்பள்ளியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் காவிக்கொடி இருப்பது போன்ற மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

அந்த வாட்ஸ்-அப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் அபிஷேக் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து அபிஷேக்கை நேற்று இரவு பழைய உப்பள்ளி பகுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அபிஷேக் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையம் முன் நேற்று இரவு இஸ்லாமிய மதத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அபிஷேக்கை தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார் இப்பகுதியை விட்டு உடனடியாக விலகி செல்லும்படி எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் இரவு 11.30 மணி அளவில் திடீரென ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்  திரண்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிஷேக்கை தங்களிடம் ஒப்படைக்கும்படி போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு போலீசார் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அங்கு கூடியிருந்தவர்கள் போலீஸ் நிலையம் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். அருகில் இருந்த மருத்துவமனை, மதவழிபாட்டு தளம் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.

நிலைமை கட்டுக்கு அடங்காமல் சென்றதையடுத்து  கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியில் ரப்பர் குண்டு வைத்து வானத்தை நோக்கி சுட்டும் கூட்டத்தை போலீசார் கலைத்தனர். இதையடுத்து நள்ளிரவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த வன்முறை சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமும், பெரும் பரபரப்பும் நிலவியது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்த வன்முறை தொடர்பாக 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் 12 போலீசார் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து உப்பள்ளி நகர் முழுவதும் இன்று காலை முதல் வருகிற 20-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Next Story