இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது - உலக வங்கி தகவல்


இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது - உலக வங்கி தகவல்
x
தினத்தந்தி 18 April 2022 3:13 PM IST (Updated: 18 April 2022 3:13 PM IST)
t-max-icont-min-icon

உலக வங்கியின் கொள்கை ஆய்வு அறிக்கையின்படி, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அதிகமாக உள்ளது.

புதுடெல்லி,

2011-2019ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் தீவிர வறுமை 12.3 சதவீதம் குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.145க்கும் ($1.90)  குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீவிர வறுமை அளவிடப்படுகிறது.

உலக வங்கியின் கொள்கை ஆய்வு அறிக்கையின்படி, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அதிகமாக உள்ளது. 

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சி எம் ஐ இ), நுகர்வோர் பிரமிட் வீட்டுக் கணக்கெடுப்பு (சி பி ஹச் எஸ்) சர்வே முடிவுகளை  உள்ளீடாக கொண்டு இந்த ஆய்வு அறிக்கையை பொருளாதார வல்லுநர்களான சுதிர்த சின்ஹா ராய் மற்றும் ராய் வான் டெர் வெய்ட் ஆகியோர் தொகுத்துள்ளனர்.

2014 இல் தொடங்கப்பட்ட நுகர்வோர் பிரமிட் வீட்டுக் கணக்கெடுப்பு,  நான்கு மாத இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

உலக வங்கியின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

 *2011-2019ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் தீவிர வறுமை 12.3 சதவீதம் குறைந்துள்ளது.

 *2011 முதல் 2019 வரை, இந்தியாவில் கிராமப்புற வறுமை 14.7 சதவீதம் குறைந்துள்ளது.

 *2011 முதல் 2019 வரை, இந்தியாவில் நகர்ப்புற வறுமை 7.9 சதவீதம் குறைந்துள்ளது.

 *2011 ஆம் ஆண்டை விட 2019ல், இந்தியாவில் வறுமை 12.3 சதவிகிதம் குறைவாக உள்ளது.

 *2011ல் 22.5 சதவீதமாக இருந்த வறுமையுற்றவர்களின் எண்ணிக்கை, 2019ல் 10.2 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆய்வின்படி, சிறிய நிலம் கொண்ட விவசாயிகள் அதிக வருமான வளர்ச்சியை அனுபவித்துள்ளனர்.

2013 மற்றும் 2019 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளின்படி, சிறிய நிலத்தை வைத்துள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.அதே காலகட்டத்தில், பெருநிலம் வைத்துள்ள விவசாயிகள் வருமானம் 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.


Next Story