டெல்லி; ஜஹாங்கிர்புரியில் போலீசார் மீது கல் வீச்சு, ஒருவர் கைது


டெல்லி; ஜஹாங்கிர்புரியில் போலீசார் மீது கல் வீச்சு, ஒருவர் கைது
x
தினத்தந்தி 18 April 2022 10:20 AM GMT (Updated: 2022-04-18T15:50:47+05:30)

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று முன் தினம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது

புதுடெல்லி,

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பையும் கலைந்து போக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அத்துடன் போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

அத்துடன் கலவரக்காரர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் ஏராளமான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை  22- பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக இன்று நிகழ்விடத்தி விசாரிக்க டெல்லி  குற்றப்பிரிவு  போலீசார் சென்றனர். அப்போது ஜஹாங்கிர்புரி பகுதியின் சி பிளாக் என்ற இடத்தில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இவ்விவகாரம்  குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி காவல்துறை, “  கல் வீசப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையை மிகைப்படுத்தி வெளியிடப்பட்டதாகும். அங்கு சிறிய சலசலப்பு மட்டுமே ஏற்பட்டது. ஒருவரை கைது செய்து விசாரிக்கிறோம்” எனத்தெரிவிக்கப்பட்டது. 


Next Story