ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றமில்லை - மத்திய அரசு தகவல்
தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் சிலவற்றை 8 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரவே ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிசீலித்து வருகிறது என்று செய்தி வெளியானது.
புதுடெல்லி,
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சினைகளைக் களையும் வண்ணம் பல முயற்சிகள் எடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதுதவிர தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில், மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 5 சதவீத வரி விகிதத்தை நீக்கிவிட்டு, சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்குக்கும், மீதமுள்ளவை 8 சதவீத வகைகளுக்கும் மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனாலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் சிலவற்றை 8 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரவே ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிசீலித்து வருகிறது என்று செய்தி வெளியானது..
மாநிலங்களில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாநில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த குழுவினர் புதிய பரிந்துரைகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்த குழுவினர் தங்களது பரிந்துரைகளை அடுத்த மாதத்துக்குள் இறுதி செய்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஜி எஸ் டி சம்பந்தப்பட்ட முக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படி வரியை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story