குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசை வெற்றி பெறச்செய்ய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கேட்டது.
பிரசாந்த் கிஷோர், கடந்த 16-ந் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் வெற்றிக்கான யுக்திகளை தெரிவித்தார்.
இந்தநிலையில், சோனியாகாந்தி இல்லத்தில் நேற்று காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில், சோனியாகாந்தி சிறிது நேரம் பங்கேற்றார்.
மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, பிரியங்கா, முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில், குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடகா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராவது பற்றியும் பேசப்பட்டது.
பிரசாந்த் கிஷோர் தெரிவித்த யோசனைகள் பற்றி கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இதில், பிரசாந்த் கிஷோர் பங்கேற்காதபோதிலும், சோனியாகாந்தியை தனியாக சந்தித்து விட்டு சென்றார்.
4 மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோரின் வியூகம் குறித்த தங்கள் சிபாரிசுகளை அறிக்கையாக தயாரித்து, சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story