பீகாரில் முதல்-மந்திரியின் நிகழ்ச்சி நடந்த இடத்தில் விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு
பீகாரில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மக்களோடு உரையாடும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் பெண் ஒருவர் விஷம் குடித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவர் வாரந்தோறும் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மக்களின் நீதிமன்றத்தில் முதல்-மந்திரி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
இதில், நிகழ்ச்சி முடிந்தபோது, கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே நின்றிருந்த ஒரு பெண் திடீரென விஷம் குடித்து உள்ளார்.
இதனை முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் அந்த பெண்ணை பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது, அவர் நலமுடன் உள்ளார். இதன்பின்பு, அவரது பெற்றோரை அழைத்து அவர்களிடம் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு மனவ்ஜித் சிங் கூறும்போது, பீகாரின் பாட்னா நகரில் நவுபத்பூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அந்த பெண் திருமணத்திற்கு பின்னான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரது கணவர் சிறையில் உள்ளார். முதல்-மந்திரி நடத்திய மக்களின் நீதிமன்றம் நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு வெளியே திடீரென விஷம் குடித்து விட்டார். அவர் ஏன்? இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story