காந்தி குடும்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருவர் வர வேண்டும் - மூத்த தலைவர் கேவி தாமஸ் கருத்து


காந்தி குடும்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருவர் வர வேண்டும் - மூத்த தலைவர் கேவி தாமஸ் கருத்து
x
தினத்தந்தி 19 April 2022 7:52 PM IST (Updated: 19 April 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ஜாகர் மற்றும் கே.வி.தாமஸ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

காந்தி குடும்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருவர் வர வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கேவி தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தாமஸ், முதல் மந்திரி பினராயி விஜயனைப் புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கே.வி.தாமஸ், சுனில் ஜாகர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஜாகர் மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ் தனக்கு கட்சியின் மத்திய ஒழுங்காற்றுக் குழு அளித்த காரண நோட்டீசுக்கு இன்று பதிலளித்துள்ளார். 

அதில், “கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தனிப்பட்ட விசாரணை வேண்டும்” என்று  கேட்டுள்ளார்.

முன்னதாக, ராகுல் காந்தி கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பதில்லை, கட்சியின் தலைமை காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவரிடமே இருக்க வேண்டும்  என்ற அவசியமில்லை என்ற ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் கருத்துக்கு தான் உடன்படவில்லை என்று அவர்  தெரிவித்துள்ளார்.

“நாட்டில் காங்கிரஸ் இல்லையென்றால் சமூக வன்முறைகள் இன்னும் அதிகமாக பெருகிவிடும் அபாயம் உள்ளது. இந்த அடிப்படையில், ராகுல் காந்தியோ அல்லது காந்தி குடும்பத்தில் உள்ள எவரேனும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், பிரியங்கா அதை ஏற்கலாம் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

கட்சியின் அடுத்த தலைவராக ராகுலைத் தேர்ந்தெடுப்பதில் தாமஸ் உறுதியாக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா காந்தி வரலாம் என்ற கருத்தில் அவர் உள்ளார். 

Next Story