பட்டாசு வழக்கு மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூலை 26-ந்தேதிக்கு தள்ளிவைப்பு..!
பட்டாசு வழக்கு தொடர்பான மனுக்கள் மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
புதுடெல்லி,
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல்கள் ராஜீவ் தத்தா, எம்.ஏ.சின்னசாமி, துஷ்யந்த் தவே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் கடந்த மார்ச் 21-ந்தேதி ஆஜராகினர்.
அவர்கள், பட்டாசு வழக்கு கடந்த ஆண்டு நவம்பருக்கு பின் மீண்டும் விசாரிக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கும்போது இந்த வழக்கை விசாரித்தால் ஒருவகையான கவலை தொற்றிக்கொள்கிறது. பசுமை பட்டாசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் இறுதித்தீர்ப்பு, சட்டவிரோதமாக பசுமையல்லாத பட்டாசுகள் தயாரிப்பதையும், திருமணம், பண்டிகையில் பயன்பாட்டை தடுக்கவும் உதவும்.
அந்த வழக்கை தற்போது விசாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.
அதை ஏற்ற நீதிபதிகள்,பட்டாசு வழக்கு ஏப்ரல்19-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான இறுதி விசாரணை தேதியை குறிக்கும் வகையில் இன்று இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மூல மனுதாரரான அர்ஜுன் கோபால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தனியாக விசாரிக்கப்படுமா என கேட்டார்.
அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தனியாக விசாரிப்போம். பிரதான பிரச்சினை தொடர்பான வழக்கில் கவனம் செலுத்துவோம் என தெரிவித்து, இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான இறுதி விசாரணையை ஜூலை 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோருவதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருக்க ஒரு காரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story