ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்துக - சுப்ரீம் கோர்ட்டு
ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். போலீசார் அனுமதியளிக்காதபோதும் ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். அப்போது, பேரணி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. மோதலில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதனை தொடந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று இடிக்கப்படும் என வடக்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இந்த உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Related Tags :
Next Story