காஷ்மீரில் ரூ.2,027 கோடியில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
காஷ்மீரில் ரூ.2,027 கோடியில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதையை பிரதமர் மோடி வரும் 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
ஜம்மு,
காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருகிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதில் இந்த சுரங்கப்பாதையையும் அவர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இரு வழி போக்குவரத்துக்காக இரட்டைக்குழல் சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தால் குவாசிகுண்ட்-பனிகால் இடையேயான பயண தூரம் 16 கி.மீ. தூரம் குறையும் எனவும், பயண நேரமும் 1 மணி நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சுரங்கப்பாதையை தவிர ரூ.38,082 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story