பா.ஜ.க., காங்கிரசில் உள்ள நல்லவர்கள் ஆம் ஆத்மியில் இணைய வேண்டும்; பேரணியில் கெஜ்ரிவால் பேச்சு


பா.ஜ.க., காங்கிரசில் உள்ள நல்லவர்கள் ஆம் ஆத்மியில் இணைய வேண்டும்; பேரணியில் கெஜ்ரிவால் பேச்சு
x
தினத்தந்தி 23 April 2022 2:43 PM IST (Updated: 23 April 2022 2:43 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மற்றும் காங்கிரசில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அந்த கட்சிகளில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் என இமாசல பிரதேசத்தில் பேரணியில் பேசிய கெஜ்ரிவால் கூறியுள்ளார்.






காங்ரா,



இமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் ஷாப்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாம்பி மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் இன்று மதியம் பேரணியாக சென்றார்.

அதன்பின்னர் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் முன் அவர் உரையாற்றினார்.  இந்த பேரணியில் கெஜ்ரிவால் பேசும்போது, இமாசல பிரதேசத்தின் மக்கள் மற்றும் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரை டெல்லிக்கு வரும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்.  அவர்கள் டெல்லியிலுள்ள அரசு பள்ளிகளை வந்து பார்வையிடட்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய இமாசல பிரதேசம் உருவாக வேண்டிய தருணமிது.  பா.ஜ.க. மற்றும் காங்கிரசில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அந்த கட்சிகளில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் வந்து இணைய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.  இந்த மாநிலத்தின் மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படி நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்தில் முன்கூட்டியே பா.ஜ.க. சட்டசபை தேர்தலை நடத்த இருக்கிறது என நான் கேள்விப்பட்டேன் என்றும் அவர் பேசியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் உடன் இணைந்து காங்ரா மாவட்டத்தின் நக்ரோட்டா பக்வான் பகுதியில் நேற்று ஊர்வலம் சென்றதுடன், பொது பேரணியிலும் கலந்து கொண்டார்.  இதனை தொடர்ந்து, கெஜ்ரிவாலின் இன்றைய பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.

இதில், இமாசல பிரதேச மக்கள் மட்டுமின்றி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், இந்த பேரணியை உற்று கவனித்து வருகின்றன.  ஆம் ஆத்மிக்கு மக்கள் எந்தளவுக்கு ஆதரவு தருகின்றனர் மற்றும் அக்கட்சியால் மக்களை கவர முடியுமா? என்பன போன்ற விசயங்கள் கேள்வியாக முன்வைக்கப்பட்டு உள்ளன.

இமாசல பிரதேசத்தில் இரு கட்சிகளின் ஆட்சியே பல காலங்களாக தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், ஆம் ஆத்மி இந்த பேரணியில் திரளான கூட்டத்தினரை கவர்ந்து விட்டால் 3வது கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என மற்ற இரு கட்சிகளுக்கும் தெளிவான ஒரு செய்தியை உறுதிப்படுத்தி விடும்.

பஞ்சாப்பில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி, அக்கட்சி யாரும் எதிர்பாராத வகையில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, பிரசார வாக்குறுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி மக்களின் நன்மதிப்புகளை பெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.


Next Story